Sunday, November 1, 2009

பறவைகள்

அன்னம்
அபூர்வமான இயல்புகள் பல இதன் மீது ஏற்றிச் சொல்லப்பட்டுள்ளன. பாலில் கலந்துள்ள நீரை விடுத்துப் பாலை மட்டும் குடிக்கின்ற சக்தி இதற்கு இருப்பதாகக் கூறப்படுவது இவற்றுள் ஒன்று. இது ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன் காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம் முதலிய கலைகளிலும் அன்னப் பட்சிக்கு முக்கிய இடம் உண்டு. இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னப்பட்சி மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னப் பட்சியின் உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். அன்னப் பட்சி என்பது இந்தியப் பழங்கதைகளில் வருகின்ற ஒரு கற்பனைப் பறவையாகும்.

முக்குளிப்பான்

முக்குளிப்பான் (Tachybaptus ruficollis) என்பது குடிபெயராத/புலம்பெயராத சுமார் 23 செ.மீ அளவுடைய ஒரு இந்திய வாத்தாகும். இதை தண்ணிப்புள்ளு எனவும் அழைப்பர். மந்த-காக்கி நிறம் கொண்ட குண்டான நீர்ப்புள் இது. சிறிய, கூரான அலகும் வாலற்றதுமான இந்தப் பறவை ஏரிகளிலும் (வேடந்தாங்கல்) குளங்களிலும் இணையாகவோ கூட்டமாகவோ காணப்படும்.
இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் சமவெளியிலிருந்து 2500 மீ உயரம் வரை காணப்படும். நன்றாக நீந்தவல்லது; தேர்ந்த மூழ்கி. சிறு அலை கூட எழுப்பாமல் மிகவும் வேகமாக மூழ்கும் திறனுடையது.
பொதுவாக அதிக இயக்கம் இல்லாது இருந்தாலும் தேவைப்படும் போது அதிக தூரங்களுக்கு பறக்கவல்லது. நீர்ப்பூச்சிகள், அவற்றின் நுண்புழுக்கள், தலைப்பிரட்டைகள், தவளைகள மற்றும் கிரத்தேசியன்கள்.

மீன்கொத்தி

மீன்கொத்தி உலகமெங்கும் பரவலாகக் காணப்படும் ஒரு பறவையினமாகும். ஏறத்தாழ 90 வகையான மீன்கொத்தி இனங்கள் உலகில் உள்ளன. இவை பெரிய தலைகளும் நீண்ட கூரிய அலகுகளும் குட்டைக் கால்களும் சிறு வால்களும் கொண்டவையாகும். எடுப்பான நிறங்கள் கொண்ட இம் மீன்கொத்தி இனங்களின் வகைப்பாட்டில் மூன்று குடும்பங்கள் உள்ளனன. அவையாவன, ஆற்று மீன்கொத்திகள் எனப்படும் ஆல்சிடினிடீ (Alcedinidae), மர மீன்கொத்தி எனப்படும் ஆல்க்கியோனிடீ (Halcyonidae), நீர் மீன்கொத்தி எனப்படும் செரிலிடீ (Cerylidae).
நீர்நிலையருகில் வாழும் மீன்கொத்திகள் சுழியோடி சிறு மீன்களைப் பிடித்து உண்கின்றன. தவளைகள், பூச்சிகளையும் உண்கின்றன. இவற்றின் கண்கள் நீருள்ளும் வெளியேயும் பார்க்கக் கூடியதான முட்டைவடிவ வில்லையைக் கொண்டுள்ளன. மர மீன்கொத்திகள் ஊர்வனவற்றைப் பிடித்துண்கின்றன. எல்லா வகையான மீன்கொத்திகளும் தாம் பிடித்த இரையை மரத்தில் அடித்தோ கல்லில் வீழ்த்தியோ கொன்று உண்கின்றன.

பூநாரை

வளைந்த அலகும் இளஞ்சிவப்பு நிற உடலும் கொண்ட கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சேர்ந்த பறவை இது. உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கிப் பிழைக்கும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று.
குஜராத்தின் கச்சு (Rann of Kutch) பகுதியில் தான் இவை கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் கூடு சேற்று மண்ணைக் குவித்து ஏற்படுத்தப்படுகின்றது. இனச்சேர்க்கை முடிந்து, முட்டையிட்டபின் ஆண், பெண் பூநாரைகள் இரண்டுமே ஒன்று மாற்றி ஒன்று அடை காக்கும். பல்லாயிரம் பூநாரைகள் ஒன்றாக கூடி இருப்பது இவற்றின் தனித்தன்மை - இதுவே இவற்றுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றது. நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் நீட்டியபடி பூநாரைகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.
கால்களால் சேற்றுநீரைக் கிளறியவுடன், வளைந்த அலகைக் கொண்டு நீரை அள்ளும் பூநாரை, அதன் அலகினுள் இருக்கும் வடிகட்டும் அமைப்பைக் கொண்டு தன் இரையை மட்டும் எடுத்துக்கொள்கிறது. பூநாரையின் உணவில் மிதவை உயிரிகள் (planktons), முட்டைப்புழுக்கள் (larvae), சிறு மீன்கள் ஆகியவை அடங்கும். பூநாரைகள் உண்ணும் கூனிறால -போன்ற ஒரு வகை கிரத்தேசிய உயிரினம் தான் இவற்றின் இளஞ்சிவப்பு நிறத்துக்கு காரணமாகும். பறவைகள் காப்பகத்தில் வைத்து பராமறிக்கப்படும் பூநாரைகள் இந்நிறமற்று காட்சியளிப்பது நாம் அறிந்ததே. மகிழ்வூட்டும் இப்பறவைகளின் கோடியக்கரை வரத்து வருடாவருடம் குறைந்து கொண்டிருப்பது நமக்கு ஒரு எச்சரிக்கை மணியே.

தீக்கோழி

தீக்கோழிகள் இயற்கையில், ஆபிரிக்காவின் பூமத்திய ரேகைக் காட்டு வலயங்களில், வடக்கு, தெற்கு ஆகிய இரு பகுதிகளிலுமுள்ள savannaக்கள், அரைப் பாலைவனங்களில் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு இனமான S. c. சிரியாக்கஸ் இப்பொழுது அழிந்துவிட்டது.
தீக்கோழிகளின் இறகுகள் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காக உபயோகப்பட்டு வந்தன. சிறிய உடலமைப்புள்ள மனிதர்கள் சவாரிசெய்யக் கூடிய அளவுக்குத் தீக்கோழிகள் பெரியவையாகும். இதனால் வட ஆபிரிக்காமற்றும் அரேபியாவின் சில பகுதிகளில் இவை ஓட்டப் பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டன.
ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்ளும் என்ற கதை மிகவும் பிரபலமானது. இத்தகைய நடைமுறையைக் காட்டும் அவதானிப்புப் பதிவுகள் எதுவும் இல்லையெனினும், எதிரி விலங்குகள் அண்மையிலுள்ளபோது, தான் தெளிவாகக் காணப்படாமலிருப்பதற்காகத், தீக்கோழி, தனது கழுத்தையும், தலையையும் நிலத்தில், படுக்கை நிலையில், வைத்துக்கொண்டிருப்பது அறியப்பட்டுள்ளது. பயமுறுத்தப்பட்டால், தீக்கோழி தனது வலுவான கால்களால் உதைத்துக் கடும் காயத்தை உண்டாக்கக்கூடியது. தீக்கோழிகளில் கூட்டுக் கூடமைப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. பல பெண் தீக்கோழிகள் தங்கள் முட்டைகளை ஒரே கூட்டில் இடுகின்றன. இம் முட்டைகள் பகலில் பெண் தீக்கோழிகளாலும் இரவில் ஆண்களாலும் அடைகாக்கப் படுகின்றன. தீக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகளாகும். வாழும் பறவைகளுள மிகப்பெரியது தீக்கோழி(Struthio camelus) ஆகும். இது 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. பறக்காத பறவை. ratites (Palaeognaths) எனப்படும் ஒப்பீட்டளவில் பழமையான குழுவைச் சேர்ந்தது.

வான்கோழி

வான்கோழிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. காட்டிலும் கூட்டமாக வசிக்கும். வான்கோழி (Turkey) தரையில் வசிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரியலில் இது ஃபாசியனிடே (Phasianidae) என்னும் குடும்பத்தில், மெலீங்கிரிடினே (Meleagridinae) என்னும் துணைக்குடும்பத்தில், மெலீகிரிஸ் (Meleagris) என்னும் இனத்தைச் சேர்ந்தது என்பர்.இது உருவத்தில் கோழியை விடப் பெரியதாகவும், சற்று பெரிய கழுத்தும் பெரிய இறக்கைகளும், குட்டையான வாலும் உடையது. உருவத்தில் பெரியதாக இருப்பதால் இதனால் பறக்க முடியாது. வேகமாகவும் ஓடாது.
கோழிகளைப் போலவே தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.வான்கோழிகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்துத் தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. இவை தங்களுக்கு தீங்கு ஏற்படும் என்று உணர்ந்தால் உரத்து ஒலியெழுப்பும்.

Saturday, October 31, 2009

கழுகு

கழுகு என்பது ஒரு வலுவான பெரிய பறவையையும் அதன் இனத்தையும் குறிக்கும். இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் கொன்றுண்ணிப் பறவைகள் (birds of prey) என்று சொல்வதுண்டு. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு என அழைக்கப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து குடுமி எழால் என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.
கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை வெண்டலைக் கழுகும், பொன்னாங் கழுகும் ஆகும். கழுகுகளில் பெட்டைக் கழுகு சேவற்கழுகை விட சற்று பெரிதாக இருக்கும்.