Sunday, November 1, 2009

பூநாரை

வளைந்த அலகும் இளஞ்சிவப்பு நிற உடலும் கொண்ட கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சேர்ந்த பறவை இது. உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கிப் பிழைக்கும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று.
குஜராத்தின் கச்சு (Rann of Kutch) பகுதியில் தான் இவை கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் கூடு சேற்று மண்ணைக் குவித்து ஏற்படுத்தப்படுகின்றது. இனச்சேர்க்கை முடிந்து, முட்டையிட்டபின் ஆண், பெண் பூநாரைகள் இரண்டுமே ஒன்று மாற்றி ஒன்று அடை காக்கும். பல்லாயிரம் பூநாரைகள் ஒன்றாக கூடி இருப்பது இவற்றின் தனித்தன்மை - இதுவே இவற்றுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றது. நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் நீட்டியபடி பூநாரைகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.
கால்களால் சேற்றுநீரைக் கிளறியவுடன், வளைந்த அலகைக் கொண்டு நீரை அள்ளும் பூநாரை, அதன் அலகினுள் இருக்கும் வடிகட்டும் அமைப்பைக் கொண்டு தன் இரையை மட்டும் எடுத்துக்கொள்கிறது. பூநாரையின் உணவில் மிதவை உயிரிகள் (planktons), முட்டைப்புழுக்கள் (larvae), சிறு மீன்கள் ஆகியவை அடங்கும். பூநாரைகள் உண்ணும் கூனிறால -போன்ற ஒரு வகை கிரத்தேசிய உயிரினம் தான் இவற்றின் இளஞ்சிவப்பு நிறத்துக்கு காரணமாகும். பறவைகள் காப்பகத்தில் வைத்து பராமறிக்கப்படும் பூநாரைகள் இந்நிறமற்று காட்சியளிப்பது நாம் அறிந்ததே. மகிழ்வூட்டும் இப்பறவைகளின் கோடியக்கரை வரத்து வருடாவருடம் குறைந்து கொண்டிருப்பது நமக்கு ஒரு எச்சரிக்கை மணியே.

1 comment: