
பவழமல்லி அல்லது பவளமல்லி என்னும் இம்மரம் தென் - தென்கீழ் ஆசிய நாடுகளில் வளரும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது. இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும்.
இலைகள் தளவாடங்களை மெருகேற்றத் தேய்ப்பதற்காகப் பயன்படும்.
பூவின் காம்பிலிருந்து பெறப்படும் பவளநிறச் சாயம் டுசார் பட்டு எனப்படும் பட்டுத்துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும் இலைகளும் பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டு/என்பு வலி, காய்ச்சல், தலைவலி என்பவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.