Friday, October 30, 2009

முல்லை


முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.
கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

நந்தியாவட்டை

நந்தியாவட்டை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் பூவும் இலையும் மருத்துவக் குணங்கள் உடையன.
நந்தியாவட்டை எண்ணெய், நந்தியாவட்டையின் இலைகளை நன்றாக அலசிச் சுத்தமாக்கி, இடித்துச் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடித்து நந்தியாவட்டை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. கண் எரிச்சல், கண்பார்வை மங்குதல் என்பவற்றுக்கு இது கண்ணில் ஒரு துளி (மூலிகை மருத்துவம் தெரிந்தவரின் மருத்துவ ஆலோசனை பின்பற்றப்பட வேண்டும்) விடப்படுகிறது. சரும நோய்களுக்கும் தடவலாம்.

பவழமல்லி


பவழமல்லி அல்லது பவளமல்லி என்னும் இம்மரம் தென் - தென்கீழ் ஆசிய நாடுகளில் வளரும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது. இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும்.

இலைகள் தளவாடங்களை மெருகேற்றத் தேய்ப்பதற்காகப் பயன்படும்.
பூவின் காம்பிலிருந்து பெறப்படும் பவளநிறச் சாயம் டுசார் பட்டு எனப்படும் பட்டுத்துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும் இலைகளும் பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டு/என்பு வலி, காய்ச்சல், தலைவலி என்பவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.

Thursday, October 29, 2009

நொச்சி

நொச்சி (Vitex Negundo) குளம் குட்டைகளின் கரையோரங் களிலும் பாதையோரங்களிலும் பக்கக் கிளைகளுடன் படர்ந்து வளரும் சிறு செடியாகும். மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.
நொச்சி இலை நெற்பயிருக்குத் தழையுரமாகவும் விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. நொச்சி இலையின் மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை. ஆதலால் தானியப் பாதுகாப்பில் நொச்சி இலை பயன்படுகிறது. ஓலைச் சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.

மல்லிகை

மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையன. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.மதுரை மல்லிகை மிகவும் புகழ் வாய்ந்தது.

தாமரை

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

அல்லிப்பூ

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.